நீங்குதல் Leaving

நீங்குதல்

எறும்புகள் பகல் கனவுகளை மொய்க்கின்றன 
பின் இழுத்துச் செல்கின்றன
 
தாரை தாரையாக
உருகிக் கரிக்கின்ற உப்புத்துளிகளை 
காயங்களில் இருந்து குடைந்து 
எடுத்துச் செல்கின்றன 
மணல் புற்றுகளின் களஞ்சியங்களுக்கு 
 
குருத்தெலும்புகளை அரித்துக் கொண்டிருந்த 
வெறுமையின் உதிரத்தை மணந்து 
ஒன்றுக்கொன்று கனவுக்குள் சம்பாஷித்துக்  கொள்ளுகின்றன 
 
தனக்குத்தொனன தூபமிடும் 
வசியமறிந்தவர்கள் அறிவர்
காலத்தைத் தூவி விசிறும் பகல் கனவுகள் 
ஏன் காணப்படுகின்றன
 
மணல் புயல்களின் சூறைகளை
மூடிக்கொண்டிருக்கும் புற்றுகளின் சுரங்கங்கள் 
இடம்பெயரக் கூடியது. 
 
புற்று மணல் நிறம் மாறி மாறி  
கனவின் சாயலை உமிழ்கின்றது 
சமிக்ஞைகள் வழங்கப்பட்ட எறும்புகள் 
புற்றிலிருந்து விரைகின்றன. 
 
மர்மங்கள் வெளியேறும் 
மணிக்கட்டின் அறுந்த நரம்பிலிருந்து 
வழியும் குருதியில் 
அந்தியின் சூரிய ஒளி பட்டு ஒளிர்கிறது
 

Original Poem by

Anar

Translated by

Hari Rajaledchumy with The Poetry Translation Workshop Language

Tamil

Country

Sri Lanka